அறியாத வயதில்
மிதிவண்டியின் ஓற்றைச்
சக்கரத்துடன் உலா
வருவோம்!
அழுக்குக் கைகளுக்காக
அன்னையிடம் அடிவாங்கி;
வியர்வைப் பூத்த கைகளுடன்
பாடப் புத்தகங்கள் நம் மடியில்!
கோலிக் குண்டுகள்
நம் அரைக்கால் சட்டையின்
பையை நிரப்ப;
பம்பரங்களும் பட்டங்களும்;
வியர்வை ஒட்டியச் சட்டைகள்
நம் முதுகை முத்தமிட;
இடமேதுமில்லை ஊரில்
நம் பாதம் தொடாமல்!
பள்ளியிலும்
கல்லூரியிலும் நம்
பயணம் தொடர;
பயணம் தொடங்கியதும்
நம் உறவு முறிய!
பட்டங்களும் பட்டயங்களும்
என்னை பாலைக்கு அனுப்ப;
மனம் விட்டுப் பேச
மனங்கள் இல்லை இங்கே!
எந்திர வாழ்க்கையில்
அங்கமாய் நான்;
எதையோத் தேடி;
எல்லாவற்றையும்
பறிக்கொடுக்கும் அப்பாவிகளில்
நானும் ஒருவன்!
ஆளுக்கொரு விடுப்பு என்பதால்;
அதிசயமானது நம் சந்திப்பு!
இணையத்தில்
வாழ்த்துக்களோடு நம்
வார்த்தை முடிந்துவிட்டது;
அந்நிய நாடு நம்மை
அந்நியமாக்கிவிட்டது!
Tweet
No comments:
Post a Comment