பாதியில் பயணம்;
அடுக்கு மாடி குடியிருப்புகள்
அத்தனையும் அவனுக்கு;
ஒடுவதற்கு உரிமையாய்
எங்களிடம் இருப்பது
பாதை அல்ல;
பாதம் மட்டும்தான்!!
வெறிப்பிடித்த கூட்டம் ஒன்று
வீதியில் உலா வர;
சிதறி ஒடிய கூட்டதிற்குள்
குமுறல் சப்தம் காணிக்கையாய்
கயவர்களுக்கு!!
அமைதிப் பேச்சுவார்த்தை
அழகாய் நடக்கும் ஐ.நா விலே;
கதறும் சப்தம்
காதில் ஏறாது
காரணம் அவர்கள்
எல்லாம் ஏ.சி யிலே!!
கரம் சோர்ந்தாலும்
கற்கள் மட்டும் இன்னும் பிடியில்;
என் முட்டி இரண்டும்
பூமியை முத்தமிடுவதற்கு முன்
பறித்துவிட வேண்டும்
எதிரியின் ரோமத்தையாவது!!
கனலாய் கண்ணீர்த் துளிகள்
வீழ்வதற்காக அல்ல;
என் தலைமுறை வாழ்வதற்காக!!
கற்களோடு
களத்தில் நாங்கள்;
வருத்தப்பட வேண்டிய உலகமோ
வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்தது;
அட்டைப்படம் ஜொலித்தது!!
வீழ்ந்த மழலைகளைச் சுற்றி
சூழ்ந்த கூட்டம்;
ஒளிரும் புகைப்படக் கருவியால்
மிளிரும் பக்கங்கள்;
கவிதைக்குக் கருவாய்
படத்திற்குக் கதையாய்
கட்டுரைக்கு உரையாய்
வரலாற்றுக்கு வலியாய்
செத்தும் சோறுப் போட
பரிதாபப் பாரினில்
பாலஸ்தீனியராக நாங்கள்;
பறித்துக் கொண்ட என் உரிமைகள
பற்றிப் பிடித்துக் கொள்ள நான் கேட்டால்
அழைப்பிதழ் இல்லாமலே
அழகாய் பெயர் சூட்டும் உலகம்
தீவிரவாதி என்று!!
இனி
வரும் தலைமுறைக்கு
உரமாய் என் உதிரம்
பயந்து பலியாவதைவிட
பாய்ந்து புலியாவதே மேல்!!
Tweet
No comments:
Post a Comment