அன்னையின் கருவில்
உருவெடுக்கும் போது
நீ எனைக்கண்டிருக்க
நியாயமில்லை;
சுவாசத்தைச் சுவைக்க
என் மனைவியைக்
கதறவைத்து;
கருவீட்டில் இருந்து
நீ எட்டிப்பார்க்கும் போது
நீ எனைக்கண்டிருக்க
நியாயமில்லை;
எல்லோரும் உன்
அருகில் நின்று
அழகை ரசிக்க;
நான் பெயரைத்
தேர்வுச் செய்து;
களைத்துப்போன உன்
அன்னையுடன் கைப்பேசியில்
கதைக்கும் போது;
நீ எனைக்கண்டிருக்க
நியாயமில்லை!
உன் அம்மாச்
சொல்லச் சொல்ல;
எச்சில் சொட்ட அத்தா
என அழைக்கும் போது;
நான் கண்ட மகிழ்ச்சியை
நீ கண்டிருக்க
நியாயமில்லை!
உனக்கு முகம் தெரிந்து;
நான் முன்னே
நிற்கும் போது
எனை மாமா என்று
அழைத்ததுக் கொஞ்சம் கூட
நியாயமில்லை!


